

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்தது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா பேசியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்ற நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இந்திய அணி வென்றது.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3-0 என முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், சொந்த மண்ணில் மீண்டும் ஒருமுறை இந்திய அணி டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், மூத்த வீரர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் எனவும், ஆடுகளத்துக்கு ஏற்றவாறு இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் விளையாட வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளத்துக்கு ஏற்றவாறு இந்திய அணி வீரர்கள் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். அனைத்து ஆடுகளங்களிலும் 200 - 220 ரன்கள் குவிக்க முடியாது. சில ஆடுகளங்களில் 140 ரன்கள் அல்லது 170 ரன்கள் குவித்திருந்தால் கூட வெற்றி பெற முடியும். அணியில் இளம் வீரர்கள் மற்றும் குறைந்த அனுபவமுடைய வீரர்கள் இருக்கிறார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால், மூத்த வீரர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும். எந்த மாதிரியான ஷாட்டுகளை விளையாட வேண்டும், எந்த பந்துவீச்சாளரை குறிவைக்க வேண்டும் என மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு கூறவேண்டும் என்றார்.
கௌதம் கம்பீர் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவை நீக்க வேண்டும் என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்து அமித் மிஸ்ரா பேசியதாவது: தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவுக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும். இந்த பயிற்சியாளர்களின் கீழ் இந்திய அணி அனைத்துத் தொடர்களையும் இழந்துவிடவில்லை. இந்த பயிற்சியாளர்கள் குழுவின்கீழ் இந்திய அணி ஆசிய கோப்பையிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் சாம்பியன் பட்டம் வென்றது. மூத்த வீரர்கள் இளம் வீரர்களை வழிநடத்த வேண்டும். பயிற்சியாளர் களமிறங்கி விளையாட முடியாது. வீரர்கள்தான் எந்த மாதிரியான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொண்டு விளையாட வேண்டும் என்றார்.
இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அமித் மிஸ்ரா 76 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மொத்தமாக 68 சர்வதேச போட்டிகளில் அவர் 156 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.