

கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அசைக்க முடியாத அணியாக தோல்வியே காணாமல் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. ஆனால், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தவறான ஆடுகளத்தைத் தேர்வு செய்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரின் ரைஸ் ஆஃப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடில் அவர் பேசியதாவது: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா தேர்வு செய்த பிளேயிங் லெவன் எளிதில் கணிக்கக் கூடியதாக இருந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைப் போன்று ரோஹித் சர்மாவும் பிளேயிங் லெவனில் அடிக்கடி பெரிய மாற்றங்களை மேற்கொள்ள மாட்டார். ஆனால், விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் அடிக்கடி பிளேயிங் லெவனை மாற்றி ஆச்சரியமளிக்கக் கூடியவர்கள்.
2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடிய இந்திய அணியை நினைத்து நான் மிகவும் பெருமையடைந்தேன். ஏனெனில், அவர்கள் உலகின் மிகவும் சிறந்த அணியாக இருந்தார்கள். ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தவறான ஆடுகளத்தைத் தேர்வு செய்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்கள் என்றார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை தவறவிட்டபோதிலும், அடுத்த ஆண்டே ஐசிசி டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.