கௌதம் கம்பீருக்குப் பதிலாக மாற்று பயிற்சியாளரை தேடுகிறதா பிசிசிஐ?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்குப் பதிலாக மாற்று பயிற்சியாளரை பிசிசிஐ தேடுகிறதா என்பது தொடர்பாக...
gautam gambhir
கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)
Updated on
3 min read

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்குப் பதிலாக மாற்று பயிற்சியாளரை பிசிசிஐ தேடுவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களையும், சரிவையும் சந்தித்துள்ளது.

கௌதம் கம்பீரின் தலைமையின் கீழ், இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆனால், கௌதம் கம்பீரின் வருகைக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளைப் பெறவில்லை.

டெஸ்ட் போட்டிகளில் சேனா நாடுகளுக்கு (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) எதிராக இந்திய அணி 10 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தபோதே இந்திய அணியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்ததால், இந்திய அணி வீரர்களின் மீதான விமர்சனங்களும், தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் மீதான விமர்சனங்களும் மேலும் அதிகரித்தன.

வெள்ளைப் பந்து போட்டிகளைப் போன்று அல்லாது, டெஸ்ட் போட்டிகள் வித்தியாசமானவை. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடுகளை மனதில் வைத்து, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மனை பிசிசியை அதிகாரபூர்வமற்ற முறையில் அணுகியதாகக் கூறப்படுகிறது. ஆனால், டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள லக்‌ஷ்மன் ஆர்வம் காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரின் பதவிக்காலம் வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரை உள்ளது. இருப்பினும், எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து பயிற்சியாளர் மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்களிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் கௌதம் கம்பீர் தொடர்வது இந்திய அணிக்கு பலனளிக்குமா என்பதே பிசிசிஐ முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி.

கௌதம் கம்பீரின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு குறித்து பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு பிசிசிஐ சார்பில் வலுவான ஆதரவு இருக்கிறது. அவர் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றால் அல்லது இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றால், தொடர்ந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார்.

இருப்பினும், டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் தொடர்வாரா என்பதே முக்கியமான விஷயமாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட விவிஎஸ் லக்‌ஷ்மன் விருப்பம் தெரிவிக்காதது கௌதம் கம்பீருக்கு மிகவும் நல்ல விஷயமாக உள்ளது. ஏனெனில், டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட விவிஎஸ் லக்‌ஷ்மனை தவிர்த்து, பிசிசிஐக்கு தற்போது அதிக தெரிவுகள் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டபோது, அணியில் வீரர்களின் இடங்களுக்கு இருந்த பாதுகாப்பு தற்போது கௌதம் கம்பீர் தலைமையிலான அணியில் இருப்பதாக தெரியவில்லை. அணியில் தங்களது இடம் குறித்து வீரர்கள் குழப்பமான மனநிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால், ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்டபோது, வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

அணியில் எந்தவிதமான மாற்றம் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் இடம்பெறாததுதான். ஏனெனில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் அணியை வழிநடத்தி வருகிறார். மேலும், டி20 போட்டிகளுக்கான துணைக் கேப்டனாகவும் ஷுப்மன் கில் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பெறாதது அணியில் எந்த வீரர் இடம்பெறுவார் என்பது எளிதில் கணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. சரியாக விளையாடவில்லையென்றால், ஷுப்மன் கில் போன்று எந்த ஒரு வீரருக்கும் அணியில் இடமில்லாமல் போகலாம் என்பதை டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி உணர்த்துகிறது.

எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரே கௌதம் கம்பீர் முன்னே இருக்கும் தற்போதைய சவால். டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுவிட்டால், கம்பீரின் பயிற்சியாளர் பதவிக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்பதே தற்போது இருக்கக் கூடிய சூழல். டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லாவிட்டால், பிசிசிஐ சார்பில் கம்பீருக்கு ஆதரவு இருந்தாலும், அந்த ஆதரவு அவரை பயிற்சியாளராக தொடர அனுமதிக்குமா என்பது சந்தேகம்தான்.

அப்படியே அவர் பயிற்சியாளராக தொடர்ந்தாலும், மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் அவர் பயிற்சியாளராக தொடர்வாரா என்பதே தற்போதுள்ள மிகப் பெரிய கேள்வி. எதிர்வரும் போட்டிகளில் இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பதைப் பொருத்தே கௌதம் கம்பீர் தொடர்ந்து அணியின் பயிற்சியாளராக தொடர்வாரா என்பது முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கௌதம் கம்பீரும், இந்திய அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Regarding whether the BCCI is looking for a replacement coach for the Indian team's head coach, Gautam Gambhir...

gautam gambhir
2025: டி20யில் ஆதிக்கம் முதல் டெஸ்ட்டில் வீழ்ச்சி வரை! இந்திய கிரிக்கெட் ஒரு பார்வை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com