

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை மாற்ற உள்ளதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது என பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படத் தவறி வருவதுடன், வரலாற்றுத் தோல்விகளையும் சந்தித்து வருகிறது.
கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்ததால், சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக தொடர்ந்த இந்திய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. அதன் பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரையும் இந்திய அணி இழந்தது.
பார்டர் - கவாஸ்கர் தொடருக்குப் பிறகு, மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இருப்பினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்தது சொந்த மண்ணில் இந்திய அணியின் ஆதிக்கம் குறைந்தது வருவதை உறுதிப்படுத்தியது. அதன் பின், இந்திய அணியின் மீதான விமர்சனங்களும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்களும் அதிகரித்தன.
முற்றிலும் தவறான செய்தி
கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ், இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சராசரியாக செயல்பட்டு வருவதால் அவருக்குப் பதிலாக டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு மாற்று பயிற்சியாளரை பிசிசிஐ தேடுவதாக செய்திகள் பரவின. அந்த பொறுப்புக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மனை பிசிசிஐ நாடியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மனை நியமிக்க பிசிசிஐ அவரை அணுகியதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது என பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முயற்சித்து வருவதாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை. முக்கிய செய்தி நிறுவனங்களும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. ஆனால், அந்த செய்தியில் உண்மை இல்லை. பயிற்சியாளரை மாற்ற பிசிசிஐ முயற்சிப்பதாக பரவும் செய்தியை பிசிசிஐ நேரடியாக மறுக்கிறது. யார் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால், இந்த விஷயம் தொடர்பாக பிசிசிஐ எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. இதைத் தவிர வேறு எதுவும் என்னால் கூற முடியாது. இந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்றார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இந்திய அணி 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றியும், 10 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.