

இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளன.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை அந்த அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்காவை நியமித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக மலிங்கா அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வரை செயல்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலிங்காவின் அனுபவம் இலங்கை அணிக்கு மிகுந்த உதவியாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணிக்காக 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்கா 107 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 42 வயதாகும் அவர் டி20 லீக் தொடர்களில் அணிகளுக்கு பயிற்சியளித்துள்ள அனுபவம் கொண்டவர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற அவர், அணிகளுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவதை செய்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு பந்துவீச்சு யுக்தி தொடர்பான பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தாசுன் ஷானகா தலைமையிலான முதற்கட்ட இலங்கை அணியை அண்மையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.