

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டின் கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (டிச.31) அறிவித்துள்ளது.
முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரஷீத்கான் கேப்டனாகவும், இப்ராஹிம் ஜத்ரான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தோள்பட்டைக் காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக், ஆல் ரவுண்டர் குல்பதின் நைப் இருவரும் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அணியில் தலைமைத் தேர்வர் அஹ்மத் ஷா சுல்மான்கில் கூறுகையில், “கடந்த சில நாள்கள் விவாதங்கள் நடத்தி நல்ல அணியைத் தேர்வு செய்திருக்கிறோம். குல்பதின் நைப் பெரிய ஆட்டங்களுக்கான வீரர்.
அவரின் வருகை எங்கள் அணிக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமைந்திருக்கிறது. நவீன் உல் ஹக் மீண்டும் அணிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரின் வருகை எங்கள் பந்துவீச்சின் தரத்தை மேம்படுத்தியிருக்கிறது” என்றார்.
முஜீப் உர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மிஸ்ட்ரி சுழற்பந்து வீச்சாளர் அல்லா ஹசன்பர் மாற்று வீரராகவுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதி வரை எட்டியிருந்த ஆப்கானிஸ்தான், இந்த உலகக் கோப்பையில் சென்னையில் பிப். 8 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணி விவரம்
ரஷீத் கான் (கேப்டன்), இப்ராஹிம் ஜத்ரான் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), முகமது இஷாக் (விக்கெட் கீப்பர்), செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, ஷாஹிதுல்லா கமால், ஹஸ்மத்துல்லா ஒமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபஸல் ஹக் ஃபரூக்கி, அப்துல்லா அஹ்மத்ஸாய்.
தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் (ரிசர்வ்)
அல்லா ஹசன்பர், இஜாஸ் அகமது, ஜியா உர் ரஹ்மான் ஷரிஃபி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.