
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் இருவரும் விலகியுள்ளனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது. அனைத்து அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.
பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் விலகியுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்தும் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் இருவரும் விலகியுள்ளதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணித் தேர்வுக் குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி கூறியதாவது: துரதிருஷ்டவசமாக பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரால் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடரிலிருந்து மூத்த வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகியுள்ளது மற்ற வீரர்களுக்கு மிகப் பெரிய தொடரில் விளையாட கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என்றார்.
இதையும் படிக்க: கபில்தேவ், ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜடேஜா!
சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் இருவரும் விலகியுள்ளதால், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவர்கள் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.