
கடந்த சில ஆண்டுகளாக கவர் டிரைவ் ஷாட் தனது பலவீனமாக இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு பிடித்தமான கவர் டிரைவ் ஷாட் அடிக்க முயன்று தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக ஆட்டமிழந்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி இந்த ஷாட்டினை விளையாடி பலமுறை ஆட்டமிழந்தார்.
தொடர்ச்சியாக ஒரே மாதிரியான ஷாட் விளையாடி ஆட்டமிழப்பதால், விராட் கோலி மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. முன்னாள் வீரர்கள் பலரும் அவரது ஷாட் தேர்வு முறையை விமர்சித்தனர். இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் கவர் டிரைவ் ஷாட்டுகளை அருமையாக விளையாடிய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.
பலமா? பலவீனமா?
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கவர் டிரைவ் ஷாட் தனது பலவீனமாக இருக்கிறது. ஆனால், அந்த ஷாட்டுகளை விளையாடுவதன் மூலமே ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது என விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக கவர் டிரைவ் ஷாட் எனது பலவீனமாக இருப்பது குழப்பாக இருக்கிறது. ஆனால், அந்த ஷாட்டுகள் விளையாடி நான் அதிக ரன்கள் குவித்துள்ளேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கவர் டிரைவ் ஷாட்டுகளை எனது பலம் என்பதை மீண்டும் உணர்ந்ததாக நினைக்கிறேன்.
முதல் இரண்டு பவுண்டரிகள் எனக்கு கவர் டிரைவ் ஷாட் மூலம் கிடைத்தது. அதனால், ரிஸ்க் எடுக்கலாம் என முடிவு செய்து அதே ஷாட்டுகளை விளையாடியதாக நினைக்கிறேன். ஏனெனில், கவர் டிரைவ் ஷாட்டுகளை விளையாடும்போது, நான் நன்றாக விளையாடுவதாக உணர்கிறேன். நான் விளையாடிய விதம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்திய அணி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பானது. ஆட்டத்தின் தேவைகளை உணர்ந்து விளையாடுவது பிடித்திருக்கிறது. பல ஆண்டுகளாக இந்த பங்களிப்பை அணிக்காக வழங்கி வருகிறேன் என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.