இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது: ஷிகர் தவான்
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில்லுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஷுப்மன் கில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவர் 46 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்த நிலையில், இந்திய அணியில் ஷுப்மன் கில் நிகழ்காலத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார் எனவும், அணியில் அவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் மிகவும் அழகாக பேட்டிங் செய்கிறார். அணிக்காக தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கிறார். அவருடைய நிகழ்காலம் சிறப்பாக இருக்கிறது. இந்திய அணியில் அவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது.
இளம் வீரர்களுடன் இணைந்து ரோஹித் சர்மா மகிழ்ச்சியாக விளையாடுகிறார். அவருடைய அனுபவங்களை அணியில் உள்ள இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இளம் வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்கள் சிறப்பாக செயல்பட ரோஹித் சர்மா உதவுகிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். கடினமான சூழல்களில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்தும் அவர் இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். இதுபோன்ற அறிவுரைகள் மிகவும் முக்கியம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.