ஒருவர் இரட்டை சதம், இருவர் சதம் விளாசல்; தென்னாப்பிரிக்கா 615 ரன்கள் குவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 615 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
ரியான் ரிக்கல்டான்
ரியான் ரிக்கல்டான்படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
2 min read

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 615 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று (ஜனவரி 3) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இரட்டை சதம் விளாசிய ரியான் ரிக்கல்டான்

தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அய்டன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கல்டான் களமிறங்கினர். மார்க்ரம் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, வியான் முல்டர் 5 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ரியான் ரிக்கல்டான் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசி அசத்தினர். கேப்டன் டெம்பா பவுமா 179 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் 232 பந்துகளில் 176 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவருடன் டேவிட் பெடிங்ஹம் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

முதல் நாளில் 316 ரன்கள் குவித்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது தென்னாப்பிரிக்க அணி. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே டேவிட் பெடிங்ஹம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், ரியான் ரிக்கல்டானுடன் கைல் வெரைன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் இரட்டை சதம் விளாசியும், கைல் வெரைன் சதம் விளாசியும் அசத்தினர். கைல் வெரைன் 147 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ரியான் ரிக்கல்டான் 343 பந்துகளில் 259 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 29 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

பின் வரிசை ஆட்டக்காரர்களான மார்கோ யான்சென் மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் தங்களது பங்குக்கு அதிரடியாக விளையாடி தென்னாப்பிரிக்க அணி 600 ரன்களைக் கடக்க உதவினர். மார்கோ யான்சென் 54 பந்துகளில் 62 ரன்கள் (8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தும், கேசவ் மகாராஜ் 35 பந்துகளில் 40 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தும் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 615 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் மற்றும் சல்மான் அகா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிர் ஹம்ஸா மற்றும் குர்ரம் ஷாஷத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.