
19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி அசத்தலான வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (ஜனவரி 18) மலேசியாவில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்திய அணி அதன் முதல் போட்டியில் இன்று (ஜனவரி 19) விளையாடியது.
44 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் 13.2 ஓவர்களில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கெனிகா கேசர் அதிபட்சமாக 15 ரன்கள் எடுத்தார். 5 வீராங்கனைகள் ரன் ஏதும் எடுக்காமலும், 3 பேர் ஒற்றை இலக்க ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்தியா தரப்பில் பருணிகா சிசோடியா 3 விக்கெட்டுகளையும், ஜோஷிதா மற்றும் ஆயுஷி சுக்லா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அபார வெற்றி
45 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 4.2 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சானிகா சால்கே 18 ரன்களுடனும், கமலினி 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷிதா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிக்க: ரஞ்சி கோப்பையில் விளையாடும் ரவீந்திர ஜடேஜா!
இந்த வெற்றியின் மூலம், நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்த உலகக் கோப்பை டி20 தொடரை மிகவும் சிறப்பாக தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.