மகளிர் உலகக் கோப்பை: 3 ஓவருக்குள் மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்!

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மலேசியாவை 3 ஓவருக்குள் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வைஷ்ணவி சர்மா
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வைஷ்ணவி சர்மாபடம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மலேசியாவை 3 ஓவருக்குள் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மலேசியா முதலில் விளையாடியது.

31 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

முதலில் விளையாடிய மலேசிய அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.3 ஓவர்களில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்கள் எடுக்கவில்லை. 4 பேர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வைஷ்ணவி சர்மா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஒரு மெய்டன் ஓவரையும் வீசினார். அவரைத் தொடர்ந்து, ஆயுஷி சுக்லா 3 விக்கெட்டுகளையும், ஜோஷிதா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்தியா அபாரம்

32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 2.5 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. கொங்கடி த்ரிஷா 12 பந்துகளில் 27 ரன்களுடனும் (5 பவுண்டரிகள்), கமலினி 5 பந்துகளில் 4 ரன்களுடனும் (ஒரு பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இந்திய அணியில் அறிமுக வீராங்கனையாக களமிறங்கி அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வைஷ்ணவி சர்மாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி இரண்டு வெற்றிகளுடன் குரூப் ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com