ரூ.800 கோடியில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திடல்! அமராவதியில் அமைகிறது!

அமராவதியில் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் திடல் அமைக்கப்படும் என்று ஆந்திர கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் திடல்
கிரிக்கெட் திடல் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

அமராவதியில் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் திடல் அமைக்கப்படும் என்று ஆந்திர கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநில தலைநகரான அமராவதியில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி திடலை மிஞ்சும் வகையில், 1.32 லட்சத்துக்கும் அதிகமான இருக்கைகள் கொண்ட நாட்டிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் திடலுக்கான திட்டங்களை ஆந்திர கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு மிகப்பெரிய திடல் அமையும் பட்சத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் திடல் என்ற புதிய வரலாற்றையும் உருவாக்க உள்ளது அமராவதி கிரிக்கெட் திடல்.

இதுகுறித்து ஆந்திர கிரிக்கெட் சங்கத் தலைவர் கேசினேனி சிவந்த் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “அமராவதியில் 60 ஏக்கர் நிலம், திடல் கட்ட ஆந்திர மாநில அரசிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.

வடக்கு கடலோர ஆந்திரம், விஜயவாடா மற்றும் ராயலசீமா உள்ளிட்ட 3 இடங்களில் மூன்று தனித்தனி கிரிக்கெட் அகாடமிகள் நிறுவப்படும். இந்த அகாடமிகளில் பயிற்சிக்காக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிதாலி ராஜ் மற்றும் ராபின் சிங் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள்.

உள்ளூர் வீரர்களின் திறமைகளை வளர்த்தெடுக்கவும், அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த முன்முயற்சியாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் இரண்டு ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வீரர்களை ஐபிஎல் அணிகளில் இடம்பிடிக்க வைக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிக்க | 10,000 ரன்களை கடந்தார் ஸ்டீவ் ஸ்மித்! டெஸ்ட் கிரிக்கெட்டில்..!

2029 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை அமராவதியில் நடத்தும் நோக்கில் ஆந்திர கிரிக்கெட் சங்கம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஐபிஎல் போட்டிகளை நடத்தும் வகையில் அதிநவீன வசதிகளுடன் விசாகப்பட்டினம் திடலை நவீனமயமாக்குவதிலும் ஆந்திர கிரிக்கெட் சங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திடல்கள்

1. நரேந்திர மோடி கிரிக்கெட் திடல் (அகமதாபாத், இந்தியா) - 1.32 லட்சம் இருக்கை வசதிகள்.

2. மெல்பர்ன் கிரிக்கெட் திடல் (மெல்பர்ன், ஆஸ்திரேலியா) - 1 லட்சத்துக்கும் அதிகமான இருக்கை வசதிகள்.

3. ஈடன் கார்டன் (கொல்கத்தா, இந்தியா) 68,000 இருக்கை வசதிகளுடன் உலகின் அழகான மைதானங்களுள் ஒன்றாகும்.

4. ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் திடல் (ராய்ப்பூர், இந்தியா) - 65,000 க்கும் மேற்பட்ட இருக்கை வசதிகள்.

5. பெர்த் திடல் (பெர்த், ஆஸ்திரேலியா) - 61,000-க்கும் மேற்பட்ட மக்கள் அமரக்கூடிய உலகின் ஐந்தாவது பெரிய திடல்.

இதையும் படிக்க |ஐசிசி தலைமைச் செயல் அலுவலர் ராஜிநாமா! பாகிஸ்தான் திடல் விவகாரம் காரணமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com