
19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் விளாசி இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், இன்று (ஜூலை 5) நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். ஆயுஷ் மாத்ரே 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து, வைபவ் சூர்யவன்ஷியுடன் விஹான் மல்ஹோத்ரா ஜோடி சேர்ந்தார்.
இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய அவர் 52 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவரது விக்கெட்டினை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடியதைப் போன்று நான்காவது போட்டியிலும் சூர்யவன்ஷி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
52 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம் 19 வயதுக்குட்படோருக்கான ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதிரடியாக விளையாடிய அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய விஹான் மல்ஹோத்ராவும் சதம் விளாசி அசத்தினார். அவர் 121 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 363 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜாக் ஹோம் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். செபஸ்டியன் மோர்கன் 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் மிண்டோ ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
364 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
Indian team's Vaibhav Suryavanshi has set a record by scoring the fastest century in an Under-19 ODI.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.