
லண்டன் லார்ட்ஸ் திடலில் உள்ள எம்சிசி அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் திறக்கப்பட்டது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்கு 'ஆண்டர்சன் - டெண்டுல்கர் தொடர்' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து முறையே தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்ற நிலையில் இந்தத் தொடர் சமனில் இருக்கிறது. இவ்விரு அணிகளும் விளையாடும் மூன்றாவது போட்டி ‘கிரிக்கெட்டின் தாயகம்’ என அழைக்கப்படும் லண்டனின் லார்ட்ஸ் திடலில் இன்று(ஜூலை 10) தொடங்கியது.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்சிசி அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை கௌரவிக்கும் விதமாக அவரின் உருவப்படம் திறக்கப்பட்டது.
18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்தப் படம், ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் என்பவரால் வரையப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிவரை அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்தப் படம் பின்னர் பெவிலியனுக்கு மாற்றப்படும். ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட்டுக்கு இது முதல் படம் கிடையாது. இவர் இதற்கு முன்னதாக, கபில் தேவ், பிஷன் சிங் பேடி, திலிப் வெங்சர்க்கார் ஆகியோரின் படங்களையும் வரைந்துள்ளார்.
இதுபற்றி சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “இது எனக்கு மிகப்பெரிய கௌரவம். 1983 ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பைய வென்ற போது நான் லார்ட்ஸ் திடலில் இருந்தேன்.
நான் நம்முடைய கேப்டன் கபில்தேவ் கோப்பையை வென்றிருந்தார். அந்தத் தருணம்தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்குத் துளிர்விட்டது. தற்போது என்னுடைய உருவப்படமும் பெவிலியனுக்குச் செல்லவிருக்கிறது. இது மிகவும் சிறப்பானதாகும்” என்றார்.
‘தி லார்ட்ஸ் போர்ட்ரைட் புரோகிராம்’ கடந்த முப்பதாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால், 1950 ஆம் ஆண்டுகளில் திறக்கப்பட்ட எம்சிசி அருங்காட்சியகம் விக்டோரியன் காலத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது. மேலும், ஐரோப்பாவிலேயே சிறந்த விளையாட்டு அருங்காட்சியகமாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் லாங் ரூம் கேலரி ஒன்று உள்ளது. இங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க புகைப்படங்கள் அனைத்தும் உள்ளன. இங்கு 3000 படங்கள் உள்ளன. அவற்றில் 300 உருவப்படங்களாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.