
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று இந்திய மகளிரணி புதிய வரலாறு படைத்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிரணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி வென்றிருந்தது. இந்த நிலையில், ஒருநாள் தொடரில் 1-1 என்ற சமநிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்கள் பிரதிகா ராவல் 26 ரன்கள், ஸ்மிருதி மந்தனா, ஹார்லீன் தியோல் ஆகியோர் தலா 45 ரன்கள் விளாசி வீழ்ந்தனர்.
நேர்த்தியாக விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 84 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 102 ரன்கள் எடுத்து ஹர்மன்ப்ரீத் வெளியேற, ஜெமிமா 50 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 38 ரன்களும், ராதா யாதவ் 2 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 318 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணித் தரப்பில் லாரென் பெல், ஃபைலர், சார்லி டீன், சோபி எக்லெஸ்டோன், லின்சே ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர், 319 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நாட் ஸ்கைவர்பிரண்ட் 98 ரன்களும், எம்மா லேம்ப் 68 ரன்களும், அலைஸ் 44 ரன்களும், சோபியா டங்கிலி 34 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியில் கிராந்தி காட் 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஸ்ரீ சரானி 2 விக்கெட்டுகளும், தீப்தி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம், இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஆட்டநாயகி விருதை வென்றார். மேலும், அந்த விருதை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீராங்கனை கிராந்தி காட்டுடன் பகிர்ந்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.