
மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல், அதிரடி ஆட்டத்துடன் அனைத்துவித சர்வதேச போட்டிகளில் இருந்தும் விடைபெற்றார்.
மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டி தொடரை முழுமையாக வென்ற ஆஸ்திரேலிய அணி டி20 தொடரிலும் முதலிரண்டுப் போட்டிகளில் வென்று முன்னிலையில் இருக்கிறது.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, சர்வதேசப் போட்டிகளில் ஓய்வை அறிவித்த மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல், திடலுக்குள் வந்தபோது அவருக்கு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் இருபுறமும் நின்று ஹால் ஆஃப் பிரேம் கௌரவம் அளித்தனர்.
ஆண்ட்ரே ரஸல் பெவிலியனில் இருந்து படி வழியாக இறங்கி வந்தபோது, ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாகப்படுத்தினர். அப்போது கிங்ஸ்டன் கிரிக்கெட் திடல் ரசிகர்களின் கைதட்டலில் அதிர்ந்தது.
அதிரடி ஆட்டத்துக்குப் பெயர் போனவரான ஆண்ட்ரே ரஸல், இந்தப் போட்டியிலும் அதே பாணியைத் தொடர்ந்தார். வெறும் 15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் விளாசி வீழ்ந்தார்.
37 வயதான ஆண்ட்ரே ரஸல், 86 டி20 போட்டிகளிலும் (1122 ரன்கள்), 56 ஒருநாள் போட்டிகளிலும் (1034 ரன்கள்), ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார். மேலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 2012, 2016-ம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் ரஸலும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.