
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த பரத் அருண், 2022 ஆம் ஆண்டில் இருந்து நிகழாண்டு வரை சிறப்பாக பணியாற்றினார்.
இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த பரத் அருணின் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2022 ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது.
சஞ்சீவ் கோயங்காவின் லக்னௌ அணிக்கு 62 வயதான பரத் அருண், 2 ஆண்டுகள் பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னௌ அணியில் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தொடர்ந்து செயல்படுவாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், பரத் அருண் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு சாம்பியனாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படத் தவறிய நிலையில், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டித் அவரது தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நேற்று திடீரென விலகினார்.
அவர் பதவி விலகிய அடுத்த நாளே பரத் அருணும் விலகி, வேறு அணியில் ஒப்பந்தம் ஆகியிருப்பதால், கொல்கத்தா அணி தகுதிவாய்ந்த பயிற்சியாளரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது.
கௌதம் கம்பீர், ரியான் டென்டோஸேட், அபிஷேக் நாயர், பிரெண்டன் மெக்கல்லம், ட்ரெவர் பேலிஸ் மற்றும் கமலேஷ் ஜெயின் உள்ளிட்டோரில் ஒருவருக்கு தலைமைப் பயிற்சியாளருக்கான வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.