
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்க அணி 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
அணியின் வெற்றிக்கு வித்திட்ட மார்க்ரம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் அய்டன் மார்க்ரம் 6 பந்துகளில் 0 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தார்.
முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்த மார்க்ரம், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். சிறப்பாக விளையாடிய அவர் 207 பந்துகளில் 136 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரிகள் அடங்கும்.
கடைசி வரை களத்தில் இருந்து போட்டியை முடித்துக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெற்றி பெறுவதற்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜோஸ் ஹேசில்வுட் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் ஆகி மார்க்ரம் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்ட மார்க்ரமுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதையும் படிக்க: இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்: டேவிட் வார்னர்
மார்க்ரம் ஆட்டமிழந்து வெளியேறியபோது, லார்ட்ஸ் திடலில் உள்ள ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய மார்க்ரமுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.