Australia's Marnus Labuschagne, right, and batting partner Usman Khawaja react as they walk past each other
உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன்படம் | AP

டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் தோல்வி; ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரில் மாற்றமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்றுடன் (ஜூன் 14) நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 27 ஆண்டுகளில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி ஐசிசி கோப்பையை வென்றது.

டாப் ஆர்டரில் மாற்றம் செய்யப்படுகிறதா?

டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் இன்னும் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டீவ் ஸ்மித், சாம் கான்ஸ்டாஸ் மற்றும் நாதன் மெக்ஸ்வீனி போன்ற வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இருப்பினும், அவர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரச்னை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் வெளிப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் உஸ்மான் கவாஜாவுடன் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். ஆனால், அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் முதல் இன்னிங்ஸில் 17 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்களும் எடுத்தார். 3-வது வீரராக களமிறங்கிய கேமரூன் கிரீனும் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 0 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரில் மாற்றம் கொண்டுவரப்படலாம் எனத் தெரிகிறது.

அணியில் தொடக்க ஆட்டக்காரர் இடம் குறித்து பயிற்சியாளர் மெக்டொனால்டு பேசியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மிகப் பெரிய தருணம். இறுதிப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக யாரை களமிறக்கலாம் என்பது குறித்து நிறைய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி எங்களைக் காட்டிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் முன்னேற்றம் தேவைப்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

லபுஷேன் விளையாடிய விதம் குறித்து அவர் ஏமாற்றத்துடன் இருப்பார். அவர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. ஆனால், விரைவில் அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறோம். அதன் காரணமாக அவரை தொடர்ச்சியாக அணியில் தேர்வு செய்கிறோம். வீரர்கள் அவர்களது கிரிக்கெட் பயணத்தில் ஒரு கட்டத்தில் அணியில் தேர்வு செய்யப்படாமல் போகலாம் என நினைக்கிறேன். மார்னஸ் லபுஷேன் கடினமாக உழைக்கிறார். ஆனால், அதற்கான பலன் இருக்க இருக்க வேண்டும். தற்போது, அவர் விளையாடியுள்ள விதம் குறித்து ஏமாற்றத்துடன் இருப்பார் என்றார்.

ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 25 ஆம் தேதி பார்படாஸில் தொடங்குகிறது.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக லபுஷேன் தொடர்வாரா அல்லது தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் வேறு யாரேனும் களமிறக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com