
டெஸ்ட்டில் கேப்டனாக முதல் போட்டியில் சதம் அடித்த ஷுப்மன் கில் ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி முதல்நாளில் 359/3 ரன்கள் குவித்துள்ளது. இதில் ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் சதமடித்து அசத்தினார்கள்.
இந்திய வீரர்களில் முதல்முறையாக கேப்டனாகி சதமடித்தவர்கள் வரிசையில் ஷுப்மன் கில் 5-ஆவது வீரராக இடம் பிடித்துள்ளார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வுக்குப் பிறகு கேப்டன் பொறுப்பைப் பெற்றுள்ள ஷுப்மன் கில் மீதான விமர்சனங்களை உடைக்கும் வகையில் விளையாடி வருகிறார்.
சதமடித்த மகிழ்ச்சியில் ஷுப்மன் கில் பெரும் கூச்சலுடன் கத்திக்கொண்டே கொண்டாடினார்.
முதல்முறையாக 1951-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விஜய் ஹசாரே சதமடித்து அசத்தினார். இவரும் இங்கிலாந்துக்கு எதிராக அடித்தது சுவாரசியமான விஷயம். ஆனால், அவர் தில்லியில் அடித்திருந்தார்.
அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. கேப்டனாக முதல் போட்டியில் 150-க்கும் அதிகமாக அடித்தவர்களில் அவர் உலக அளவில் 3-ஆவது இடத்தைப் பிடித்தார்.
இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சுனில் கவாஸ்கர் 2-ஆவதாக இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
நியூசிலாந்துக்கு எதிராக அவர்களின் நாட்டிலேயே முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 1987-இல் திலிப் வெங்சர்கார் 102 ரன்கள் அடித்து அசத்தினார்.
75 ரன்களுக்கு இந்திய அணி தடுமாறியபோது அசத்தலாக சதம் அடித்தார். இருப்பினும் இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.
விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டனான போது முதல் இன்னிங்ஸில் 115 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 141 ரன்களும் எடுத்து அசத்தினார்.
இந்தப் பட்டியலில் கிரேக் சேப்பலுக்குப் பிறகு விராட் கோலிதான் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்தவராக இருக்கிறார். இருப்பினும் இந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.
இங்கிலாந்துக்கு எதிராக ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்தப் போட்டியில் 175 பந்துகளில் 127 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 1 சிக்ஸர் 16 பவுண்டரிகள் அடங்கும்.
இந்தியாவின் தலைசிறந்த வீரர்கள் பட்டியல்களில் ஷுப்மன் கில் இடம்பெறுவார் என்ற நம்பிக்கையை இதன்மூலம் விதைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.