
துபையில் மட்டுமே விளையாடுவதால் இந்திய அணிக்கு எந்தவொரு ஆதாயமும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் நாளை மறுநாள் (மார்ச் 9) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஐசிசி சாம்பியன் பட்டத்தை வெல்ல இரண்டு அணிகளும் கடுமையான போட்டியாளர்களாக உள்ளனர்.
எந்தவொரு ஆதாயமும் இல்லை
இந்திய அணி துபையில் மட்டுமே விளையாடுவதால் அந்த அணிக்கு போட்டியில் சாதகமான சூழல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், துபையில் மட்டுமே விளையாடுவதால் இந்திய அணிக்கு எந்தவொரு ஆதாயமும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: துபை ஆடுகளங்களிலிருந்து எங்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கிறது என எனக்குப் புரியவில்லை. இந்திய அணி போட்டிகளில் வெற்றி பெறுவதை பார்த்த பிறகு, ஆடுகளங்கள் எங்களுக்கு சாதகமாக இருப்பதாக பலரும் உணர்கிறார்கள். அதற்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியவில்லை. போட்டியில் வெற்றி பெறுவதற்கு அன்றைய நாளில் அணிகள் நன்றாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். நன்றாக விளையாடவில்லையென்றால், தோல்விகளுக்கு காரணங்களும் கூற முடியாது. நன்றாக விளையாடி வெற்றி பெற்றால், ஆதாயம் இருக்கிறதா? இல்லையா? என்று பேச வேண்டிய அவசியமே இருக்காது.
துபையில் தங்கி பயிற்சி மேற்கொள்வதாலோ அல்லது அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுவதாலோ எங்களுக்கு ஆதாயம் இருப்பதாக நினைக்கவில்லை. நாங்கள் பயிற்சி மேற்கொள்ளும் ஆடுகளங்கள் வித்தியாசமானவை, போட்டியின்போது விளையாடும் ஆடுகளங்கள் வித்தியாசமானவை. அது அனைவருக்கும் தெரியும். அதனால், நாங்கள் எங்களது அனைத்துப் போட்டிகளையும் இங்கு விளையாடுகிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதாக இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.