துபையில் வரலாற்றை திருத்தி எழுதுமா ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள்படம் | AP
Published on
Updated on
2 min read

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் தொடங்கிய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் நாளை மறுநாள் (மார்ச் 9) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஐசிசி சாம்பியன் பட்டத்தை வெல்ல இரண்டு அணிகளும் கடுமையான போட்டியாளர்களாக உள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று மகுடம் சூடியது. அதன் பின், கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. தற்போது, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர்ச்சியாக ஒரு அணி மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை.

நியூசி.க்கு எதிரான வரலாறு திருத்தி எழுதப்படுமா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்துகொள்ள உலகம் காத்துக் கிடக்கிறது.

ஐசிசி நடத்தும் தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து இதுவரை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 4 முறை ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில், நியூசிலாந்து அணி 3 வெற்றிகளையும், இந்திய அணி ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கடந்த 2000 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி, 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகள் மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதியுள்ளன. இதில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மட்டுமே இந்திய அணி நியூசிலாந்தை வென்றுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்களுக்குள் 119 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்திய அணி 61 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 50 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவிலும், 7 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படாலும் முடிவடைந்தன.

ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளபோதிலும், ஐசிசியின் நாக் அவுட் போட்டிகளில் நியூசிலாந்தின் ஆதிக்கமே தொடர்ந்துள்ளது. தற்போது, மீண்டுமொருமுறை ஐசிசியின் நாக் அவுட் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் நாளை மறுநாள் மோதிக்கொள்ள உள்ளன.

துபையில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, ஐசிசி நடத்தும் தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் தொடரும் நியூசிலாந்து அணியின் ஆதிக்க வரலாறை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி திருத்தி எழுதுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com