இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சவாலை எதிர்கொள்ள கேன் வில்லியம்சன் தயாரா?

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சவாலுக்கு கேன் வில்லியம்சன் தயாராக உள்ளாரா என்பது குறித்து...
கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்படம் | AP
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் எவ்வாறு செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் நாளை மறுநாள் (மார்ச் 9) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

நியூசிலாந்து அணி கடைசியாக கடந்த 2000 ஆம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் தொடரில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின், அந்த அணியால் ஐசிசி நடத்தும் ஒருநாள் தொடர்களில் கோப்பையை வசமாக்க முடியவில்லை. 25 ஆண்டு காத்திருப்புக்கு பலன் கிடைக்க நியூசிலாந்து அணிக்கு ஒரு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில், அந்த அணியின் 25 வருட காத்திருப்பு முடிவுக்கு வரும்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன் பின், இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லவில்லை.

கேன் வில்லியம்சன் தயாரா?

இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் நாளை மறுநாள் (மார்ச் 9) விளையாடவுள்ள நிலையில், முக்கியமான போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக கேன் வில்லியம்சன் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும், இறுதிப்போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாகவும் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட எங்களது வீரர்களிடம் திட்டங்கள் இருக்கின்றன. நியூசிலாந்து அணியின் மூத்த வீரரான கேன் வில்லியம்சன், முக்கியமான போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கு எதிராகவும் அவர் நன்றாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

கிரிக்கெட்டில் வீரர் ஒருவர் கண்டிப்பாக இத்தனை ரன்கள் அடிப்பார் என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால், இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட கேன் வில்லியம்சன் தயாராக இருக்கிறார். எந்த விதமான ஆடுகளங்களாக இருந்தாலும், அதற்கேற்றவாறு தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ளும் திறன் அவருக்கு இருக்கிறது. இறுதிப்போட்டி அவருக்கு சிறப்பான நாளாக அமையும் என நினைக்கிறேன் என்றார்.

34 வயதாகும் கேன் வில்லியம்சன் ஒருநாள் போட்டிகளில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு 2,952 ரன்கள் குவித்துள்ளார்.

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 81 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com