ரஞ்சி கோப்பை அதிரடியை ஐபிஎல் தொடரிலும் தொடர காத்திருக்கும் கருண் நாயர்!

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
கருண் நாயர் (கோப்புப் படம்)
கருண் நாயர் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ரஞ்சி தொடரில் விதர்பா அணிக்காக விளையாடிய கருண் நாயர் மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ரஞ்சி தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய அவர் 779 ரன்கள் எடுத்தார். அதில் 5 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும்.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவருக்கு இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஐபிஎல் தொடரை குறிவைக்கும் கருண் நாயர்

விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருவதாக கருண் நாயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். அதில் சில ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். ஆனால், கடினமான காலக் கட்டங்களில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறோம் என்பது மிகவும் முக்கியம். இதுபோன்ற சூழல்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நான் கற்றுக்கொண்டேன். கடினமான சூழல்கள் என்னை இந்த நிலைக்கு கொண்டுவர உதவியுள்ளது.

இந்திய அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பை நெருங்கிவிட்டதாக நினைக்கிறேன். ஆனால், எவ்வளவு அருகில் இருக்கிறேன் எனத் தெரியவில்லை. தற்போது அதற்கு நான் கவனம் கொடுக்கவில்லை. ஆனால், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய மனதில் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் நன்றாக செயல்பட்டு என்னால் முடிந்த அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் அணிக்கு எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்.

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு திரும்பியது எனக்கு உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தில்லி கேபிடல்ஸ் அணி வீரர்களுடன் இணைந்து விளையாட ஆவலாக உள்ளேன். எல்லா போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விளையாடுவேன். கே.எல்.ராகுலுடன் இணைந்து மீண்டும் விளையாடவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 2-3 ஐபிஎல் சீசன்களாக கே.எல்.ராகுல் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.50 லட்சத்துக்கு கருண் நாயர் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com