
ஐபிஎல் தொடருக்காக தயாராகி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் தங்களது அணிகளின் பயிற்சி முகாமில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தாமதம் ஏன்?
தனிப்பட்ட காரணங்களால் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக பஞ்சாப் கிங்ஸ் அணியில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஐபிஎல் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி மார்ச் 25 ஆம் தேதி நடைபெறும் அதன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வழிநடத்தவுள்ளார். ரிக்கி பாண்டிங் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் பயிற்சி முகாமில் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் அணியில் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐபிஎல் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: அஸ்மதுல்லா ஓமர்ஸாய் வீட்டில் அவருக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது. அவர் மே 20 ஆம் தேதி பஞ்சாப் அணியுடன் இணைவார். அவரைத் தவிர்த்து, மற்ற வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவர்களது அணிகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.