

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசியவர்களின் பட்டியலில் விராட் கோலி, ரோஹித் சர்மாவை முந்தி பாகிஸ்தான் வீரர் பாபம் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதிய 2-வது டி20 போட்டி லாகூரின் கடாஃபி திடலில் நேற்றிரவு நடைபெற்றது.
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 19.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு சுருண்ட நிலையில், 13.1 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் பாபர் அசாம் 18 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். பாபர் 11 ரன்களை எடுத்த போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் ரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
123 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பாபர் அசாம், 4234 ரன்களைக் குவித்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா 151 இன்னிங்ஸ்களில் 4231 ரன்களும், விராட் கோலி 117 இன்னிங்ஸ்களில் 4188 ரன்களும் குவித்துள்ளனர்.
சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள்
பாபர் அசாம் - 4234
ரோஹித் சர்மா - 4231
விராட் கோலி - 4188
ஜோஸ் பட்லர் - 3869
பால் ஸ்டிர்லிங் - 3710
மார்டின் கப்தில் - 3531
முகமது ரிஸ்வான் - 3414
டேவிட் வார்னர் - 3277
முகமது வாசிம் - 3184
ஆரோன் பிஞ்ச் - 3120
விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், 31 வயதான பாபர் அசாம் நீண்ட நாள்களுக்கு அதிகரன்கள் குவித்தவர் பட்டியலை அலங்கரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.