

இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமீபத்தில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான அக்.25 ஆம் தேதி நடைபெற்ற கடைசிப் போட்டியின்போது, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பிடிக்க பாய்ந்து சென்ற இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடது வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர் உடனடியாக ஆடுகளத்திலிருந்து வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பந்தைப் பிடிப்பதற்காக கீழே விழுந்ததில் அடிபட்டதில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு நெஞ்சுக்கூட்டு எலும்பு முறிந்து மண்ணீரலில் உள் ரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதனால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சாதாரணப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவர் தற்போது சிட்னி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலர் தேவ்ஜித் சாய்க்கியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்றாவது போட்டியின் போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு மண்ணீரல் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. தற்போது அவர் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் உடல்நலம் சீராக உள்ளது.
இன்று மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருடன் இந்தியா மற்றும் சிட்னி மருத்துவக்குழுவினர் உள்ளனர்.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு சிறப்பாக சிகிச்சையளித்த சிட்னி மருத்துவமனையின் மருத்துவர் கௌரோஸ் ஹகிகி மற்றும் குழுவினர், இந்திய மருத்துவர் தின்ஷா பார்டிவாலாவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஷ்ரேயாஸ் ஐயர் உடல்நலம் தேறி, அவர் பறக்கத் தயாரானதும் நாடு திரும்புவார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.