

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிரணி வெற்றி பெற்றால் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் மிகப்பெரிய பரிசுத் தொகை வழங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகளிருக்கான 13-வது உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவந்தது. தற்போது இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணியும், இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.
இதுவரையில் கோப்பையை வெல்லாத இவ்விரு அணிகளும் மோதும் இறுதிப்போட்டி நாளை நவி மும்பையில் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
இரண்டாவது அரையிறுதியில் பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 339 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்த இந்திய அணி, அதே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்வதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில், இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் மிகப்பெரிய பரிசுத் தொகையை வழங்க பிசிசிஐயின் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்தாண்டு முன்னாள் பிசிசிஐ செயலரும் தற்போதைய ஐசிசி தலைவருமான ஜெய் ஷா பரிந்துரையின் படி, ஆடவர் அணிக்கு வழங்கப்பட்டும் அதே ஊதியம் மகளிர் அணிக்கும் வழங்கப்படும் பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இதேபோன்று டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்டது போலவே சுமார் ரூ. 125 கோடி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், போட்டியின் முடிவுகளுக்கு முன்னதாக பரிசு குறித்த அதிகாரபூர்வ தகவலை வெளியிடுவது நல்லதல்ல என்று பிசிசிஐ-யின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2017 ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி நூலிழையில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அப்போது இந்திய அணியின் உள்ள வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
தலைமைப் பயிற்சியாளர் துஷார் அரோத் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சிறப்பான வெகுமதிகள் வழங்கப்பட்டன. அதேபோன்று இந்திய அணி கோப்பையை வெல்லும் பட்சத்தில் பரிசுத் தொகை 10 மடங்குக்கு மேல் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.