

இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரரான ரோஹன் போபண்ணா அனைத்துவிதமான தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.
இதன்மூலம், கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற 4 இந்திய டென்னிஸ் வீரர்களில் இரண்டுமுறை வென்றவரான ரோஹன் போபண்ணா, தனது 20 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
45 வயதான ரோஹன் போபண்ணா கடைசியாக பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸில் கஜகிஸ்தானின் அலெக்ஸாண்டருடன் இணைந்து விளையாடினார். ஆனால், இந்த இணை துரதிர்ஷ்டவசமாக தொடக்கச் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி வெளியேறியது.
2023 ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பையில் இருந்து ஓய்வுபெற்ற போபண்ணா, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024-க்குப் பிறகு இந்தியாவிற்கான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், தற்போது அனைத்துவிதமான தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “விடைபெறுகிறேன்... ஆனால், இது முடிவு அல்ல. உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த ஒன்றிற்கு (டென்னிஸ்) நீங்கள் எப்படி விடைபெறுகிறீர்கள்? மறக்க முடியாத 20 வருட சுற்றுப்பயணத்திற்குப் பிறகு,
இப்போது... நான் அதிகாரபூர்வமாக என் ராக்கெட்டை தொங்கவிடுகிறேன். டென்னிஸ் எனக்கு வெறும் விளையாட்டாக இருந்ததில்லை. எனக்கு வலிமையையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்னை ஊக்குவித்து, என்னை உந்தித் தள்ளிய பயிற்சியாளர்கள், சக வீரர்கள், பிசியோதெரபிஸ்ட், என்னுடைய அணியினர், எனது நண்பர்கள், எனது ரசிகர்கள், என்னுடன் பயணித்தவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது குடும்பத்தினர், எனது சகோதரி ராஷ்மி, எனது மனைவி சுப்ரியா, எனது மகள் திரிதா உள்ளிட்டோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
போபண்ணா ஏபிடி 1000 மற்றும் கிராண்ட்ஸ்லாம் பதக்கத்தை வென்ற மிகவும் வயதான வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் மூன்று முறை பதக்கம் வென்றவரான இவர் 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக்கில் 4-ஆம் இடம்பிடித்து மயிரிழையில் பதக்கத்தைத் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.