

கிரிக்கெட் தொடர்களில் இறுதி வரை முன்னேறினாலும் கோப்பையைத் தவறவிடுவதே வாடிக்கையாக அமைந்துவிட்டது தென்னாப்பிரிக்காவுக்கு. மகளிர் உலகக் கோப்பைப் போட்டி - 2025 பெரு மகிழ்ச்சியுடன் முடிவடைந்தது இந்தியர்களுக்கு.
ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வெல்லும் முனைப்பில் இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் ஞாயிற்றுக்கிழமை(நவ. 2) ஆக்ரோஷமாக விளையாடின. நவி மும்பையில் டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் திடலில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ‘உலகக் கோப்பையை’ உச்சி முகர்ந்தது. இந்திய வீராங்கனைகளின் இந்த வெற்றிக் களிப்பில் ஒட்டுமொத்த இந்தியாவும் திளைத்துள்ளது.
ஆனால், இறுதி ஆட்டங்களில் சொதப்பும் தென்னாப்பிரிக்காவின் துரதிருஷ்டம் தொடருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் முக்கிய கிரிக்கெட் தொடர்களின் இறுதி ஆட்டம் வரை, தென்னாப்பிரிக்கா 5 முறை முன்னேறியிருக்கிறது. ஐந்திலும் தோல்வியே!
கடந்த 2023, பிப்ரவரில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிக்கு முதல்முறையாக தகுதி பெற்ற தென்னாப்பிரிக்கா, அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
கடந்தாண்டு ஜூனில் நடைபெற்ற ஆடவர் டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் களம் கண்டன. முடிவில், தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி தோல்வியைப் பரிசளித்தது.
அதே ஆண்டில், அக்டோபரில் நடைபெற்ற மகளிர் டி20 இறுதி ஆட்டத்தில், நியூஸிலாந்து அணியிடம் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவை இந்திய இளம் வீராங்கனைகள் பந்தாடினர்.
இந்த நிலையில், தோல்விகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாக, நவி மும்பையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்துக்குப் பிந்தைய நேர்காணலில் பேசிய தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த வீரருமான மாண்ட்லா மஷிம்ப்யி, “தென்னாப்பிரிக்க சிறுமிகள் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுக்க எங்கள் வீராங்கனைகளின் ஆட்டத்திறன் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது” என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.