

ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் ஏற்பட்ட தொடர் தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் முகமது வாசீமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்ற 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றது. இதில், பாகிஸ்தானுக்கான அனைத்துப் போட்டிகளும் இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றன.
இந்தத் தொடரில் மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடிய பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில்கூட வெற்றிபெறாமல் வெறுங்கையுடனே நாடு திரும்பியது.
மேலும், இந்தத் தொடருக்கான இலங்கையில் நடத்தப்பட்ட மூன்று போட்டிகள் பருவமழை உள்ளிட்ட சில காரணங்களால் முற்றிலுமாக மழையால் பாதிப்படைந்தன.
தொடர் தோல்விகள் மற்றும் உலகக் கோப்பையில் அடுத்தச் சுற்றுக்குத் தகுதிபெறாதது உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் முகமது வாசீம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முகமது வாசீமின் ஒப்பந்தம் உலகக் கோப்பையுடன் நிறைவு பெற்றதாகவும், அதனால், அவரின் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் புதிய பயிற்சியாளரை நியமிக்க முடிவெடுத்திருப்பதாகவும்” தெரிவித்துள்ளது.
முகமது வாசீமின் தலைமையின்கீழ் கடந்தாண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை அரையிறுதி, டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்று உள்ளிட்டவற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதுவும் அவரது ஒப்பந்தம் முடித்துக் கொள்ள காரணமாக அமைந்துள்ளது. பயிற்சியாளர் மட்டுமின்றி உதவியாளர்கள் பலரும் நீக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்களின் கூற்றுபடி, பாகிஸ்தான் அணிக்கு வெளிநாட்டைச் சேர்ந்த புதிய பயிற்சியாளரைத் தேடி வருவதாகவும், ஒருவேளை சரியான பயிற்சியாளர் கிடைக்காத பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பிஸ்மா மரூஃப் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.