

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று (நவம்பர் 6) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய மார்க் சாப்மேன் 28 பந்துகளில் 78 ரன்கள் விளாசி அசத்தினார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிம் ராபின்சன் 39 ரன்களும், டேரில் மிட்செல் 28 ரன்களும் எடுத்தனர். சாண்ட்னர் 18 ரன்கள் எடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ராஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபோர்டி, ஜேசன் ஹோல்டர் மற்றும் ரோமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிரடியாக விளையாடிய ரோவ்மன் பௌவல் 16 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரோமாரியோ ஷெப்பர்டு 34 ரன்களும், அலிக் அதனாஸ் 33 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் மற்றும் ஈஷ் சோதி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜேக்கோப் டஃபி மற்றும் கைல் ஜேமிசன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.