

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவது சந்தேகம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
ஆஷஸ் தொடருக்காக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என இரண்டு அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். பெர்த்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் எனவும், ஸ்டீவ் ஸ்மித் அணியைக் கேப்டனாக வழிநடத்துவார் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவது சந்தேகம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாட வேண்டும் என்பதே தற்போது எங்களுடைய திட்டமாக இருக்கிறது. போட்டிக்கான நாள் நெருங்கும்போது என்னுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்தே, எங்களது அடுத்தக் கட்ட திட்டங்கள் இருக்கும்.
நல்ல விஷயம் என்னவென்றால், என்னால் நன்றாக பந்துவீச முடிகிறது. நன்றாக உணர்வதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு அனைத்துப் போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், பெரிய போட்டிகளில் 40 அல்லது 50 ஓவர்கள் வீசிவிட்டு, அடுத்த சில நாள்களில் அடுத்தப் போட்டிக்குத் தயாராக வேண்டும். அதற்கு என்னுடைய உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் எனத் தெரியவில்லை. முடிந்த அளவுக்கு அனைத்துப் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன் என்றார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 4 முதல் காபாவில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.