

ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகளுக்கு புதியதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள டாடா சியரா காரை பரிசாக வழங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மகளிருக்கான 13-வது ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் கடந்த நவ. 2 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் திடலில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.
முதல்முறையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசியின் பரிசுத் தொகையைத் தவிர்த்து பிசிசிஐ சார்பில் ரூ.51 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளருக்கு அவரவர் மாநில அரசுகளும் தனித்தனியே பரிசுத் தொகையை அறிவித்துள்ளன.
அதுமட்டுமின்றி கோப்பையை வென்ற இந்திய அணியினரை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோரும் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கோப்பையை வென்ற இந்திய அணியினரைக் கௌரவிக்கும் விதமாக விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள சுமார் ரூ.15- 25 லட்சம் மதிப்புள்ள டாடா சியரா காரை, இந்திய அணியில் அங்கம் வகித்த அனைத்து வீராங்கனைகளுக்கும் பரிசாக வழங்க டாடா மோட்டார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நாட்டுக்கு பெருமை சேர்ப்பதிலும், அவர்களின் தீவிர அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், புதிய விலையுயர்ந்த காரை வழங்க முடிவு செய்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.