

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் தொடரை சமன்செய்தது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் தென்னாப்பிரிக்க அணி 3 டி20, 2 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்தச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் சமன் ஆன நிலையில், டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்றது. மேலும், முதல் ஒருநாள் போட்டியிலும் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஃபைசலாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷாகீன் ஷா அஃப்ரிடி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சல்மான் அலி அகா 69 ரன்களும் (5 பவுண்டரி), முகமது நவாஸ் 59 ரன்களும் (3 பவுண்டரி, 4 சிக்ஸர்), சைம் அயூப் 53 ரன்களும் (5 பவுண்டரி, 1 சிக்ஸர்), ஃபஹீம் அஷ்ரஃப் 28 ரன்களும்(2 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்தனர்.
தென்னாப்பிரிக்க அணித் தரப்பில் நன்ரே பர்கர் 4 விக்கெட்டுகளும், பீட்டர் 3 விக்கெட்டுகளும், கார்பின் போஷ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர், 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணித் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் லாரன் ட்ரெ பிரிட்டோரியஸ் - குயிண்டன் டி காக் இருவரும் நேர்த்தியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில், லாரன் ட்ரெ பிரிட்டோரியஸ் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அவர் வெளியேறினாலும், டோனி டி ஜோர்ஜி மற்றும் குயிண்டன் டி காக் இருவரும் பாகிஸ்தானின் பந்துவீச்சைச் சிதறிடித்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு டோனி டி ஜோர்ஜி மற்றும் குயிண்டன் டி காக் இருவரும் சேர்ந்து 151 ரன்கள் குவித்தனர். டோனி டி ஜோர்ஜி 9 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
ஓய்வுபெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் களத்துக்குத் திரும்பியுள்ள குயிண்டன் டி காக், ஒருநாள் போட்டிகளில் தனது 22-வது சதத்தை நிறைவு செய்தார்.
முடிவில் 59 பந்துகளை மீதம் வைத்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 40.1 ஓவர்களில் 270 ரன்கள் இலக்கை எட்டி தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1 -1 என்ற கணக்கில் சமன் செய்தது. சதம் விளாசிய குயிண்டன் டி காக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
தொடரை நிர்ணயிக்கும் இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி வருகிற நவ.8 ஆம் தேதி ஃபைசலாபாத்தில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.