

ஆஷஸ் தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் வயது கவனத்தை ஈர்த்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 முதல் தொடங்குகிறது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களில் 14 பேர் 30 வயதைக் கடந்தவர்கள். கேமரூன் கிரீனை (26 வயது) தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் 30 வயதைக் கடந்துள்ள வீரர்கள். மிகவும் அனுபவம் வாய்ந்த அணியாக ஆஸ்திரேலிய அணி உள்ளது. இருப்பினும், அந்த அணியில் இளம் வீரர்கள் இல்லாதது குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சில் வலுவாக இருப்பதாகவும், மூத்த வீரர்கள் அடங்கிய அனுபவம் நிறைந்த ஆஸ்திரேலிய அணியுடன் ஆஷஸ் தொடரில் களமிறங்குவதாகவும் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாமல், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள். பல ஆண்டுகளாக கற்றுக்கொண்ட விஷயங்களுடன் ஒரு குழுவாக இணைந்து நிற்கிறோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பது தெரியும்.
வயதான வீரர்கள் அடங்கிய இந்த ஆஸ்திரேலிய அணியால் சிறப்பாக செயல்பட முடியுமா என்ற சந்தேகம் வரும். ஆனால், அந்த சந்தேகம் தற்போதுள்ள அணியின் மீது வரும் என நான் நினைக்கவில்லை. அணியில் உள்ள வீரர்கள் பலரும் பல ஆண்டுகளாக ஒன்றாக பயணித்து, ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளோம் என்றார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோஷ் ஹேசில்வுட் 295 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.