

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்காக நீண்ட நாள்களாக காத்திருந்ததாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது. இதன் மூலம், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 163 ரன்கள் எடுத்தார். தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட அபிஷேக் சர்மாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்காக நீண்ட நாள்களாக காத்திருந்ததாக அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 தொடருக்காக நீண்ட நாள்களாக காத்திருந்தேன். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளோம் என அறிவிப்பு வெளியானதும் மிகுந்த உற்சாகமடைந்தேன். என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அந்த அணியின் தரமான வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நன்றாக விளையாடுவதற்கு தயாரானேன்.
அணிக்காக நன்றாக விளையாட விரும்பினால், வீரர் ஒருவர் உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய அணியின் உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதற்கு பயிற்சி மேற்கொண்டேன். ஏனென்றால், உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முழு சுதந்திரம் வழங்கியுள்ளனர். அவர்கள் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், என்னுடைய கனவு நனவானதாக இருக்கும். இந்திய அணிக்காக விளையாடி கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதற்கு தயாராக உள்ளேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.