

இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஷஃபாலி வர்மா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் பாராட்டியுள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. நவி மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஜெமிமா ரோட்ரிக்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதிப்போட்டியில் பிரதிகா ராவலுக்கு மாற்று வீராங்கனையாக அணியில் இடம்பெற்ற ஷஃபாலி வர்மா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த நிலையில், இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஷஃபாலி வர்மா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஐசிசியில் அவர் பேசியதாவது: ஷஃபாலி வர்மா விளையாடிய விதம் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. அவர் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக விளையாடி வருகிறார். அவர் தற்போது மிகவும் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை கையாண்டு வருகிறார். அவர் அதிரடியாக விளையாடத் தொடங்கிவிட்டால், அவரை தடுத்து நிறுத்துவது கடினம்.
அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டும் என விரும்பினேன். ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளையாடியதைப் பார்க்கையில் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மிகவும் அழுத்தமான சூழலில் அவர் பதற்றமின்றி விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அணிக்கு வெற்றி பெற்று தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு கடைசி வரை களத்தில் இருந்தார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.