

ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் புதிய சாதனை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஃபைசலாபாதில் இன்று (நவம்பர் 8) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 70 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இன்றையப் போட்டியில் 53 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் 7000 ரன்களைக் கடந்த 5-வது தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை டி காக் படைத்துள்ளார். அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 6989 ரன்களுடன் 5-வது இடத்திலிருந்த தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித்தின் சாதனையை டி காக் முறியடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்காக 158 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டி காக் 7009 ரன்கள் குவித்துள்ளார். அதில் 22 சதங்கள் மற்றும் 32 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 178.
ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்று விளையாடிய முதல் போட்டியில் டி காக் 63 ரன்கள் எடுத்து அசத்தினார். அதன் பின், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 123* ரன்கள் எடுத்து அசத்தினார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் 53 ரன்கள் எடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ஜாக் காலிஸ், ஏபி டி வில்லியர்ஸ், ஹாசிம் ஆம்லா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.