

உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிரணியின் அடுத்த இலக்கு குறித்து வேகப் பந்துவீச்சாளர் ரேணுகா சிங் பேசியுள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநிலங்கள் சார்பில் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டது.
உலகக் கோப்பையில் இடம்பெற்று விளையாடிய இந்திய வீராங்கனைகளில் ஒருவரான ரேணுகா சிங்குக்கு சிம்லாவில் உள்ள அவரது சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹிமாசல் மாநில அரசு அவருக்கு ரூ.1 கோடியை பரிசுத் தொகையாக அறிவித்தது.
இந்த நிலையில், தொடர்ச்சியாக வெற்றி பெறுவதை வழக்கமாக்கிக் கொள்வதே இந்திய அணியின் அடுத்த இலக்கு என ரேணுகா சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னுடைய கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. ஆனால், என்னுடைய வெற்றிக்கு காரணம் என்னுடைய அம்மா சுனிதா தாக்குரும், மாமா பூபிந்தரும்தான். எனக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிய என்னுடைய மாமா பெரிதும் ஆதரவாக இருந்தார்.
தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்ததால், இந்திய அணிக்கு அதிக அளவிலான அழுத்தம் இருந்தது. உலகக் கோப்பையை வெல்ல லீக் சுற்றின் கடைசி மூன்று போட்டிகள் மிகவும் முக்கியமானதாக இருந்தது. உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது என்றார்.
ரேணுகா சிங் தாக்குரின் தந்தை, ரேணுகா சிங் 3 வயது குழந்தையாக இருக்கையில் உயிரிழந்ததும், அதன் பின் தாய் சுனிதா தாக்குர் ரேணுகா சிங் மற்றும் அவரது சகோதரரை தனிநபராக மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கடந்த ஆண்டு பல தடுமாற்றங்களை எதிர்கொண்டேன்: ஷஃபாலி வர்மா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.