

சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 6000 ரன்களைக் கடந்துள்ளார்.
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று (நவம்பர் 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையிலும் உள்ளது.
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இன்றையப் போட்டியில் 41 ரன்கள் எடுத்தன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 6000 ரன்களைக் கடந்துள்ளார்.
இதுவரை நியூசிலாந்து அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து 176 போட்டிகளில் விளையாடியுள்ள டேரில் மிட்செல் 6032 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 11 சதங்கள் மற்றும் 34 அரைசதங்கள் அடங்கும். நியூசிலாந்து அணிக்காக 88 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டேரில் மிட்செல், 1674 ரன்கள் எடுத்துள்ளார். 55 ஒருநாள் போட்டிகளில் 2219 ரன்களும், 33 டெஸ்ட் போட்டிகளில் 2139 ரன்களும் எடுத்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் அந்த அணிக்காக அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்து அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து, 373 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19107 ரன்கள் குவித்துள்ளார். அதில் 48 சதங்கள் மற்றும் 102 அரைசதங்கள் அடங்கும்.
இதையும் படிக்க: இந்திய அணியின் அடுத்த இலக்கு இதுதான்: ரேணுகா சிங்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.