

ஆப்கானிஸ்தான், இந்தியா ஏ, இந்தியா பி அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடரில் ராகுல் டிராவிட் மகனுக்கு இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் யு-19, இந்தியா யு-19 ஏ, இந்தியா யு-19 பி அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடர் வருகிற 17 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தான் யு-19 அணியுடன் இந்தியா யு-19 ஏ, இந்தியா யு-19 பி அணிகள் விளையாடுகின்றன.
இந்த அணிகள் மோதும் அனைத்துப் போட்டிகளும் பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் நடைபெறுகின்றன. தொடருக்கான இந்தியா யு-19 ஏ, இந்தியா யு-19 பி அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முத்தரப்பு தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் மகன் விக்கெட் கீப்பர் பேட்டரான அன்வே டிராவிட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
19 வயதுக்குள்பட்டோருக்கான உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அன்வே டிராவிட், கடந்த மாதம் நடைபெற்ற வினோ மன்கட் தொடரில் கர்நாடக அணிக்கு கேப்டனாக தலைமை வகித்தார்.
அதேவேளையில், தேசிய அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூரியவன்ஷி உள்ளிட்டோருக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை.
அன்வே டிராவிட்டுக்கு தந்தையில் பிரபலத்தால் தனக்கும் பிரபலம் கிடைத்திருக்கும் சூழலில் சமீபகாலமாக தனது சிறப்பான பேட்டிங்கால் அவர் தனித்துவம் பெற்றுள்ளார். யு19 உலகக் கோப்பைக்கு முன்னதாக தன்னுடைய சிறந்த ஆட்டத்தால் அணியில் இடம்பெறுவாரா? என எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.