

விஜய் ஹசாரே தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், மூத்த வீரர்களுமான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கடந்தாண்டு(2024) இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். அதன்பின், இந்தாண்டில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட்டில் இருந்து இருவரும் விடைபெற்றனர்.
சர்வதேச டி20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டபோதிலும், இருவரும் இந்திய அணிக்காக தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரை, ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை விளையாடுவது சாத்தியமில்லாதது. அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தாவிட்டால் இருவரையும் கட்டாய ஓய்வுபெற அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகின.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் விளாசினார். விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன நிலையில், மூன்றாவது போட்டியில் 74 ரன்கள் குவித்தார்.
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களின் ஆட்டம் திருப்தியளிப்பதாக அணித் தேர்வுக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பிசிசிஐ தரப்பில் வீரர்கள் கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் மற்றும் கோலி விளையாட விரும்பும் பட்சத்தில், அவர்கள் விஜய் ஹசாரே தொடரில் விளையாட வேண்டும் அறிவுறுத்தப்பட்டது. இதனால், ரோஹித் சர்மா, விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக விளையாட மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
விஜய் ஹசாரே டிராபி டிசம்பர் 24 ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 24 மற்றும் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தக் கால இடைவெளியில் லீக் சுற்றில் 7 போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தமாக மும்பை அணி 7 போட்டிகளில் விளையாடுகிறது.
மும்பை அணியின் அனைத்துப் போட்டிகளும் ராஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் டிசம்பர் 24, 26, 29, 31 மற்றும் ஜனவரி 3, 6, 8 ஆகிய தேதிகளில் விளையாடுகிறது. ரோஹித் சர்மா அனைத்துப் போட்டிகளிலும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, சையத் முஷ்டாக் அலி கோப்பையில் மும்பை அணி தகுதிபெற்றால் ரோஹித் சர்மா, அந்தத் தொடரிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் டிசம்பர் 3 - 9 தேதியிலும், அதன்பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஜனவரி 11 ஆம் தேதியும் தொடங்கி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.