

இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு தொடருக்கான திடல்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவிய நிலையில், 2 மற்றும் 3-வது ஒரு நாள் போட்டிகள் முறையே நவ.13, நவ.15 ஆகிய தேதிகளில் ராவல்பிண்டி திடலில் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து 18 ஆம் தேதி தொடங்கும் முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் விளையாடவுள்ளன.
இந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.
இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக முத்தரப்பு டி20 தொடருக்கான ஆறு லீக் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டியுடன் சேர்த்து மொத்தமாக ஏழு போட்டிகளும் லாகூரில் இருந்து ராவல்பிண்டிக்கு மாற்றப்பட்டுள்ளன.
மூன்று கிரிக்கெட் வாரியங்கள் ஆலோசனை நடத்தி போட்டியை மாற்றிக் கொள்வதற்கு ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அடுத்தாண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடரை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோதிலும், வீரர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், எந்தவொரு வீரரும் நாடு திரும்ப விருப்பப் பட்டால் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் அனுப்பப் படுவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
தொடருக்கான அட்டவணை
நவ. 18 - பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே
நவ. 20 - இலங்கை vs ஜிம்பாப்வே
நவ. 22 - இலங்கை vs பாகிஸ்தான்
நவ. 23 - பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே
நவ. 25 - இலங்கை vs ஜிம்பாப்வே
நவ. 27 - இலங்கை vs பாகிஸ்தான்
நவ. 29 - இறுதிப்போட்டி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.