

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் இந்திய அணி 30 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களும் எடுத்தனர்.
பெரிய வெற்றியை நோக்கி நகரும் இந்திய அணி
இந்திய அணியைக் காட்டிலும் 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அய்டன் மார்க்ரம் 4 ரன்கள், வியான் முல்டர் மற்றும் ரியான் ரிக்கல்டான் தலா 11 ரன்கள், டோனி டி ஸார்ஸி 2 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்கள், கைல் வெரைன் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவைக் காட்டிலும் 63 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் டெம்பா பவுமா 29 ரன்களுடனும், கார்பின் போஸ்ச் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
கைவசம் தென்னாப்பிரிக்காவிடம் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே மீதமிருக்க, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப் பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து வருவதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.