

ஐபிஎல் தொடரில் அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக வழிநடத்துவார் என அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்காக அணிகள் அனைத்தும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவித்தும் வருகின்றன. அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைக்க இன்றே கடைசி நாள். அணிகள் தங்களுக்குள் டிரேடிங் மூலமும் வீரர்களை மாற்றிக் கொள்கின்றனர்.
டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது. சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக சிஎஸ்கேவிலிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விற்கப்பட்டுள்ளனர்.
அடுத்த ஐபிஎல் சீசனுடன் ஐபிஎல் தொடரிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் எனக் கூறப்படுவதால், விக்கெட் கீப்பர் பேட்டரான சஞ்சு சாம்சனை தொலைநோக்குப் பார்வையுடன் சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. சிஎஸ்கேவுடன் இணைந்துள்ள சஞ்சு சாம்சன் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வேகமாகப் பரவியது.
இந்த நிலையில், அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக வழிநடத்துவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் தொடரின் பாதியிலேயே விலகினார். அதன் பின், சிஎஸ்கேவை மகேந்திர சிங் தோனி கேப்டனாக வழிநடத்தி வந்தார். இந்த நிலையில், காயத்திலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் குணமடைந்துவிட்டதால், அவரிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.