

தொடர்ந்து மூன்றாவது முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் முடித்துவிட்டனர்.
அனைத்து அணிகளும் அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப் பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அடுத்த சீசனிலும் பாட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்துவார் என அந்த அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சீசனில் சன்ரைசர்ஸ் அணியை பாட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்துவார் என்பதை அவரது புகைப்படத்தைப் பகிர்ந்து அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் பாட் கம்மின்ஸ் ரூ. 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பாட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தற்போது அடுத்த சீசனிலும் அவரே அணியை கேப்டனாக வழிநடத்தவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளதால், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஹைதராபாத் அணியின் கேப்டனாக அவர் செயல்படவுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைவதற்கு முன்பாக பாட் கம்மின்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.