

ஐசிசி ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் ஆடவர் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரத்துக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் இன்று (நவ.19) வெளியிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரில் கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலின் அதிரடியான ஆட்டத்தால் தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இந்தப் போட்டியில் 119 ரன்கள் விளாசிய டேரில் மிட்செல் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 36 புள்ளிகளைப் பெற்ற டேரில் மிட்செல், 746 புள்ளிகளில் இருந்து 782 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதன்மூலம், 46 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் என்ற பெருமையையும் மிட்செல் பெற்றுள்ளார். முன்னதாக, 1979 ஆம் ஆண்டு க்ளென் டர்னர் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார்.
மார்டின் க்ரோவ், ஆண்ட்ரூ ஜோன்ஸ், ரோஜர் டோவ்ஸ், நேதன் அஸ்லே, கேன் வில்லியம்சன், மார்டின் கப்தில், ராஸ் டெய்லர் உள்ளிட்டோர் முதல் 5 இடங்களைப் பிடித்திருந்தாலும், முதலிடம் என்ற அரியணையைப் பிடித்தது கிடையாது.
முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 781 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு சரிந்துள்ளார்.
ஐசிசி ஒரு நாள் பேட்டர்களுக்கு தரவரிசைப் பட்டியல்
டேரில் மிட்செல் - 782 புள்ளிகள்
ரோஹித் சர்மா - 781 புள்ளிகள்
இப்ராஹிக் ஜத்ரன் - 764 புள்ளிகள்
ஷுப்மன் கில் - 745 புள்ளிகள்
விராட் கோலி - 725 புள்ளிகள்
பாபர் அசாம் - 722 புள்ளிகள்
ஹாரி டெக்டர் - 708 புள்ளிகள்
ஷ்ரேயஸ் ஐயர் - 700 புள்ளிகள்
சரித் அசலங்கா - 690 புள்ளிகள்
ஷாய் ஹோப் - 689 புள்ளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.