

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் அசார் அலி தேர்வுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் அசார் அலி, பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய அவர், இளைஞர் மேம்பாட்டுத் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரத்தின் துவக்கத்தில் அசார் அலி, கிரிக்கெட் வாரியத்துக்கு ராஜிநாமா கடித்தத்தை அனுப்பியதாகவும், தற்போது அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணியின் மற்றொரு முன்னாள் கேப்டனான சர்ஃப்ராஸ் அகமதுக்கு பாகிஸ்தான் ஷாகீன்ஸ் மற்றும் 19 வயதுக்குள்பட்டோருக்கான அணிகளின் மொத்த பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறுப்படுகிறது.
இதனால், கடந்தாண்டு அக்டோபரில் பதவியேற்று 12 மாத காலத்திலேயே இந்தத் திடீர் முடிவை அவர் எடுத்தாகவும் கூறப்படுகிறது.
இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் அகாடமியில் உயர்தர பயிற்சியளிப்பது குறித்த அவரின் யோசனைகளுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்பட்டதும் அவரின் பதவி விலகலுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக இருந்த அசார் அலி, 97 டெஸ்ட், 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஓய்வுபெற்ற நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இவர் பணியாற்றினார். 31 ஒருநாள் போட்டிகளில் அணிக்குத் தலைமை தாங்கி அவர், 12 வெற்றிகள் மற்றும் 18 தோல்விகளுடன் 2017-ல் பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.